அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது இதுதான் - அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

எங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டதையும் சேர்த்து மொத்தம் 436 திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் விஜய் , மந்திரிகளின் முதல் கூட்டம்
Published on

சென்னை,

எரிசக்தி வளங்கள் மற்றும் சட்ட துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் இன்று சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

முதல் அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்று முடிவடைந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர், வருங்காலங்களில், அனைத்து துறைகளுக்கும் வெற்றி தமிழகத்தின் தொலைநோக்கு திட்டங்களாக மொத்தமாக 436 திட்டங்களை ஒவ்வொரு துறைக்கும் முதல்-அமைச்சர் வழங்கியிருக்கிறார்.

436 திட்டங்கள்

ஒவ்வொரு துறைக்கும் என்னென்ன இலக்கு அதாவது எதை நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும் என்று ஒரு இலக்கை நிர்ணயித்திருக்கிறார். மொத்தமாக 436 திட்டங்களை ஒவ்வொரு துறைக்கும் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் தொலைநோக்கு திட்டத்தின் மூலமாக பயணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

தொலைநோக்கு திட்டங்கள்

இதை அந்தந்த துறையினுடைய அமைச்சர்கள் அவரவர்களுடைய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, இதற்கான விளக்கமான திட்டத்தினை வகுத்து கொண்டு அதை எவ்வளவு நாளில் செயல்படுத்த முடியும்? விரைவாக செயல்படுத்தி முடிக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

முதல்-அமைச்சர் வழங்கியுள்ள ஒவ்வொரு தொலைநோக்கு திட்டங்களையும் அவர்கள் செயல்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களுக்கும் முதல்-அமைச்சரின் ஒப்புதலின் பெயரில் விரைவில் அதை நோக்கி பயணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல் வாக்குறுதி ( 436 திட்டங்கள்)

இதில், இளைஞர்கள் மேம்பாட்டு முன்னேற்றம், பெண்கள் மகளிர் மேம்பாடு, விவசாயிகளின் வளர்ச்சி, மீனவர்களின் வளர்ச்சி மற்றும் இலஞ்ச லாவணியமற்ற நல்ல ஒரு ஆட்சி, போதை இல்லாத தமிழகம் மற்றும் அனைத்து துறைகளுக்கும் இதே மாதிரியான ஒரு தொலைநோக்கு பார்வையுடன் முதல்-அமைச்சர் வகுத்து கொடுத்திருக்கிறார். மொத்தம் 436 திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது எல்லாமே எங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டதையும் சேர்த்து மொத்தம் 436 திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக அனைத்து அமைச்சர்களும் இதை விளக்கமாக மதிப்பீடு செய்து எப்படி செயல்படுத்த வேண்டும் என்று அதை விரைவாக முழு அளவிலான திட்ட வடிவங்களுடன் கொண்டு வந்து அதற்குப் பிறகு முதல்-அமைச்சரரின் ஒப்புதலின்படி செயல்படுத்தக்கூடிய பணிகளை அவர்கள் தொடங்குவார்கள்.

டாஸ்மாக் மாற்றங்கள் குறித்து கேள்வி

போதையில்லா தமிழகம்

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. நம்முடைய இலக்கு போதையில்லா தமிழகம். தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் போதை மருந்துகள் எவ்வளவு புழக்கத்தில் இருந்தது என்று நன்றாக தெரியும். அனைத்தையும் ஒழிக்கும் அளவிற்கு முதல்-அமைச்சர் அனைத்து காவல் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக

சட்டவிரோதமாக குட்கா செயல்படுத்தக்கூடிய கடைகள் எல்லாம் சீல் வைக்கப்பட்டு வருகிறது. போதை மருந்துகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அனைத்து துறைக்கும் முடுக்கி விட்டுள்ளார். நம்முடைய பயணம் போதையில்லாத தமிழகம் 717 டாஸ்மாக் கடைகளை மூடப்படுவதற்கு இன்று வெளியிடுவதாக துறையின் அமைச்சர் ஏற்கனவே உங்களுக்கெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

ரெய்டு

எல்லா கடைகளிலும் தினமும் ரெய்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்தவிதத்திலும் இந்த அரசு போதை மருந்துகளை முற்றிலும் ஒழிக்கும் பணிகளை முதல்-அமைச்சர் முதல் நாளிலிருந்து முடுக்கிவிட்டுள்ளார். குறிப்பாக குட்காவை பொறுத்தவரைக்கும் மதுரையில் ஒரு வாரத்தில் 24 கடைகளுக்கும் மேல் சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

இலக்கு

கண்டிப்பாக அனைத்து துறைகளுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விரைவாக அதை செயல்படுத்தும் விதமாக அனைத்து துறை அமைச்சர்களும், அவர்களுடைய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து செயல்படுவார்கள்.

மேகதாது அணை பற்றி கேள்வி.

சட்டபூர்வமாக

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எந்த முயற்சிகள் எடுத்தாலும் அதை சட்டபூர்வமாக தடுக்கும் அனைத்து விதத்திலும் முதல்-அமைச்சர் முடுக்கிவிட்டுள்ளார். அதை நோக்கி, சட்டபூர்வமாக ஆலோசித்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com