ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டக்கூடாது: போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுரை

அனைத்து அரசியல் கட்சிகளையும் போலீசார் சமமாக பாவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டக்கூடாது: போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுரை
Published on

சென்னை,

அண்ணா பல்கலை மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து, ஜன., 2ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பா.ம.க., சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி கோரி, மாநகர போலீஸ் கமிஷனரிடம் டிசம்பர், 30ம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் விதிகளின்படி ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றுகூறி, அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டசபையில் தேசியகீதம் முதலில் பாடவில்லை என்று கூறி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதை கண்டித்து மறுநாளே தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. கொள்கை பரப்பு செயலாளர் சேகர் வழக்கு தொடர்ந்தார்.

அதில், பா.ம.க. 5 நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு கொடுக்கவில்லை என்று கூறி போலீஸ் கமிஷனர், ஆளுங்கட்சிக்கு மட்டும் சில மணி நேரங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உள்ளனர். விதிகளை மீறி அனுமதி வழங்கிய போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் அனுமதி இல்லாமல் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து அரசியல் கட்சியினர்களையும் போலீஸ் சமமாக பாவிக்க வேண்டும். நடவடிக்கை எடுத்தால் ஒரே மாதிரியாக மேற்கொள்ள வேண்டும். ஒரு தரப்புக்கு ஒரே நாளில் அனுமதி வழங்குவது, மற்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை பரிசீலிக்காமல் கிடப்பில் போடுவது என்ற நிலைப்பாடு எடுக்கக்கூடாது. போராட்டத்தில் பங்கேற்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியாது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு போலீசார் தான் பதில் சொல்ல வேண்டிய வரும். அவர்களை தான் குறை கூறுவர். போராட்டத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை குறித்த காலத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்கவேண்டும்" என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர், பா.ம.க. தொடர்ந்த வழக்கிற்கு வருகிற 22-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் அன்றைய தினம், இம்மனு மீது விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com