

மதுரை,
நாகர்கோவிலைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் ஒருவர், தனக்கு முட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பரமக்குடிக்கு இடமாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரர் பணியை முறையாக செய்யாததால் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். அரசு ஊழியர்கள் இடமாறுதலை உரிமையாக கோர இயலாது என்று தெரிவித்த அவர், பணி ஆணை வழங்கப்படும் போதே இடமாறுதல் உத்தரவுக்கு கீழ்படிய வேண்டும் என்ற விதிமுறை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் மீது பொதுமக்கள் ஏராளமான குற்றச்சாட்டிகளை முன்வைப்பதாக தெரிவித்த நீதிபதி, சில குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை அவசியமாகிறது என்றார். ஆரம்ப சுகாதார நிலையங்களின் இயக்குனர் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மாவட்ட அளவிலான அலுவலர் இதனை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.