திருமாவளவனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவு

வெறுப்புக் கருத்துகளை தெரிவித்ததாக திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிரணி நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்புக் கருத்துகளை தெரிவித்ததாக, இந்து முன்னணி பொதுச் செயலாளர் டி.என்.கண்ணன் புகார் அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில், புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது வழக்குப் பதிவுசெய்தனர். புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் வக்கீல்கள் டி.பார்வேந்தன், எஸ்.தீபிகா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் ‘கல்விக்கு எதிரான சனாதன கொள்கை என்ற அடிப்படையிலேயே திருமாவளவன் பேசினார்.

வெறுப்புப் பேச்சு எதையும் பேசவில்லை. 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கக் கூடிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர முறையான அனுமதி பெறப்படவில்லை’ என வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com