

சென்னை,
போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல்வர், பாதிக்கப்பட்ட மாணவி பயிலும் அதே கல்லூரியில் மீண்டும் எப்படி பணியமர்த்தப்பட்டார்? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்வராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஆப்ரகாம். இவர், தனக்கு சிறுவயதில் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி ஜார்ஜ் ஆப்ரகாம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த ஜார்ஜ் ஆப்ரகாமை மீண்டும் கல்லூரி முதல்வராக நியமித்துள்ளதாகவும், அவரது ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அசன் முகமது ஜின்னா, "பாலியல் தொல்லை அளித்ததாக ஜார்ஜ் ஆப்ரகாமுக்கு எதிராக மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியின் முதல்வராக குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் நியமித்துள்ளனர்.
மாநில மகளிர் ஆணையம் அந்த நபரை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் அவருக்கு எதிராக புகார் அளித்த மாணவிக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட மாணவி மிரட்டப்படவும் வாய்ப்புள்ளது. அந்த வழக்கில் மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் விசாரணை தொடங்கவில்லை" என்று வாதிட்டார்.
ஜார்ஜ் ஆப்ரகாம் தரப்பில், "அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில் குற்றம் சாட்டப்பட்ட நபரை மீண்டும் முதல்வராக நியமித்தது எப்படி? சம்பந்தப்பட்ட நபரை பணியிடமாற்றம் செய்ய ஐகோர்ட்டே உத்தரவிட நேரிடும்" என்று எச்சரித்தார்.
பின்னர், இந்த மனுவுக்கு கல்லூரி நிர்வாகம், ஜார்ஜ் ஆப்ரகாம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். இந்த போக்சோ வழக்கில் 3 ஆண்டுகளாக விசாரணையை தொடங்காதது ஏன்? என்பது குறித்து போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற நவம்பர் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.