

சென்னை,
சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து ரூ.1.71 கோடி உயர்ரக கஞ்சா கடத்தி வந்த இளம்பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 28 வயது இளம்பெண், சுங்கச் சோதனையை தவிர்த்து வெளியே செல்ல முயன்றார். சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி, சூட்கேஸ் மற்றும் கைப்பையை சோதனையிட்டனர்.
அதில் 23 பாக்கெட்டுகளில் உணவுப் பொருட்கள் போல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 877 கிராம் எடையுள்ள உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடியே 71 லட்சம் ஆகும். மலேசியாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த இளம்பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா?, யாரிடம் போதைப்பொருளை ஒப்படைக்க கொண்டு வந்தார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.