பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலப்படம்; நாடு தழுவிய விசாரணை தேவை - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலப்படம்; நாடு தழுவிய விசாரணை தேவை - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
Published on: 

சென்னை,

கர்நாடகாவில் பெட்ரோலில் அளவுக்கு அதிகமாக எத்தனால் கலப்பதாக வெளியான தகவல்கள் குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடு தழுவிய அளவில் சுதந்திரமான ஆய்வு, விசாரணை நடத்த வேண்டும், விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

எத்தனால் கலப்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முகமது இலியாஸ் தும்பே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“கர்நாடகாவில் விற்கப்படும் பெட்ரோலில், அரசு அனுமதித்த 20% அளவை விட அதிகமாக, அதாவது 31.2% வரை எத்தனால் கலக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நியாயமான விசாரணை மூலம் இது உண்மையெனத் தெரிந்தால், அது பெட்ரோலின் தரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் நேர்மை குறித்தே பெரிய சந்தேகத்தை எழுப்பும். இதைப் பற்றி கர்நாடக அரசும் எண்ணெய் நிறுவனங்களும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்ளாமல், மத்திய அரசு நேர்மையான மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கேட்டுக்கொண்டுள்ளது.

திட்டத்தின் பலன்கள்

மாற்று ஆற்றலை ஊக்குவிப்பதும் இறக்குமதி எரிபொருளைக் குறைப்பதும் நல்ல திட்டங்கள்தான். ஆனால், அதனால் சாதாரண மக்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது. பெட்ரோலில் எத்தனால் அதிகமாகக் கலப்பதால் வாகனங்களின் மைலேஜ் குறைவது, எஞ்சின் பழுதாகி பராமரிப்பு செலவு அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, எத்தனால் திட்டத்தின் பலன்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமாக மாறாமல், விவசாயிகளையும் கிராமப்புற மக்களையும் மட்டுமே சென்றடைய வேண்டும்.

பரிசோதிக்க வேண்டும்

எனவே, நாடு முழுவதும் பெட்ரோலில் உள்ள எத்தனால் அளவைத் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். பெட்ரோல் பங்குகளில் எவ்வளவு எத்தனால் கலக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாகக் காட்சிப்படுத்த வேண்டும்.

விதிமீறிய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கலப்பட பெட்ரோலால் வாகனம் பழுதான நுகர்வோருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். நாட்டின் எரிபொருள் கொள்கை கார்ப்பரேட் லாபத்துக்காக இல்லாமல், மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காகவே செயல்பட வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X