

சென்னை,
தமிழ்நாட்டில் வாழை சாகுபடி திருச்சி, தேனி, ஈரோடு, கோவை, கரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிகம் நடைபெறுகிறது. இங்கு விளையும் வகை வகையான வாழைப்பழங்கள் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஈரான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவிவரும் போர் சூழலால் வாழைப்பழம் ஏற்றுமதி தடைபட்டு, ரூ.12 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வாழைப்பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற நேரங்களில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவுக்கு வாழைப்பழங்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். ஆனால், தற்போது இவ்விரு மாநிலங்களிலும் வாழைப்பழ விளைச்சல் போதுமானதாக உள்ளதால், தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதில்லை. ஆந்திர மாநிலத்திற்கு மட்டும் குறைந்த விலையில் கொள்முதல் செய்து கொள்கின்றனர்.
இதனால், வாழைப்பழ ரகங்கள் விலை 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. முன்பு ரூ.55-க்கு விற்பனையான ஒரு கிலோ ஏலக்கி, தற்போது ரூ.30 ஆக குறைந்துள்ளது. இதேபோல், பூவன் ரூ.22-ல் இருந்து ரூ.11 ஆகவும், நேந்திரம் ரூ.14-ல் இருந்து ரூ.12 ஆகவும், கற்பூரவள்ளி ரூ.30-ல் இருந்து ரூ.13 ஆகவும், செவ்வாழை ரூ.40-ல் இருந்து ரூ.30 ஆகவும் விலை குறைந்துள்ளது. இதனால், வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வாழைப்பழ கொள்முதல் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.