

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம்காண்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் சீமான் பேசியதாவது,
நமது ஆட்சியில் சரிபாதி உரிமையை பெண்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அதில் நமக்கு எந்த பெருமையும் இல்லை, அது நமது பிறவிக்கடமை. பெண்கள் நம் குலதெய்வங்கள் கொடுத்த விடுதலைதான் நாம் இங்கு உலாவிக்கொண்டிருக்கிறோம். அனைவரும் அங்கீகரிக்கப்பட வேண்டும். தேசிய இன விடுதலைக்கு அரசியலை முன்னெடுக்கும் மகன் இதை செய்யவில்லையென்றால் அது அர்த்தமற்றது.
நம் நிலத்தில் நிற்கும் நாம் பிறமொழி வழி தேசிய இனங்களை எதிரியாக்கிக்கொண்டு நம் இனத்தின் விடுதலையை வெல்ல முடியாது. அதனால் எல்லா இனங்களையும் சேர்த்துக்கொள்கிறோம். நமது மொழி சிதைந்து, அழிந்து வருகிறது. நீர் வளத்தை இழந்துவிட்டோம். நில வளத்தையும் இழந்துகொண்டிருக்கிறோம். நீர், காற்று, உணவு நஞ்சாகி வருகிறது. அதனால் பிறக்கும் குழந்தை புற்றாகி வருகிறது. இது மாற வேண்டுமென்றால் மாற்றத்திற்கு ஒரே வழிதான் உள்ளது. அது நமது கையில் தான் உள்ளது. நமக்கு ஒரு வாய்ப்புதான் உள்ளது. எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே வழிதான் உள்ளது. அதுதான் கடுமையான உழைப்பு. அதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.
நாம் சாதாரணமானவர்கள்... சாகலாம் தோற்கலாம். சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை. சத்தியம் வெற்றிபெறும். நாம் சத்தியத்தின் பக்கம் நிற்கும் மக்கள் ஒருநாள் வெல்வோம். வரலாறு நமக்கு வழிகாட்டியாக உள்ளது. சத்தியம் நமக்கு சான்றாக இருக்கிறது’ என்றார்.