உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தமிழகம் வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று திருச்சிக்கு வருகை தருகிறார்.
சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமானிலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு செல்லும் அவர், திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பின்னர் சாலை வழியாக திருச்சிக்கு வரும் அவர், ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அங்கு இரவு தங்குகிறார்.திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், மன்னார்புரத்தில் நடைபெறும் ‘மோடி பொங்கல் விழா’ வில் பங்கேற்கிறார். இதையடுத்து பகல் 1.20 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து புதுடெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.






