தவெக மீது குதிரை பேர புகார்: அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த பதிலடி

அதிமுக, திமுகவினர் தாமாக வந்து தவெகவில் சேருவது குதிரை பேரம் அல்ல என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமார்
Published on

சென்னை,

திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப்போகிறார்கள் என நினைக்கிறேன் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மின் தேவை அதிகரிப்பு

எண்ணூர் அனல் மின் நிலையம் அருகில் உள்ள மீனவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம். எண்ணூர் -வட சென்னை அனல் மின் நிலையத்தால் அப்பகுதி மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உப்பூர் அனல் மின் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மின் கேபிள்கள் ஒப்பந்ததார்களால் கட் செய்யப்படுவதால் ஒருசில இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படுகிறது.

கடைசி ஒருவாரமாக பகல் நேர வெப்பம் அதிகரித்துள்ளதால் மின் தேவை அதிகரித்துள்ளது. அதிமுகவினர் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கின்றனர். தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் இருப்பதையே மறந்துவிட்டனர்.

அதிமுக - திமுக கூட்டணி

தங்கள் கட்சி தலைமை குறித்து பேசாமல் ஸ்டாலின், மோடி குறித்து அதிமுகவினர் பேசி கொண்டிருக்கின்றனர். அதிமுக - திமுக கூட்டணி ஒருங்கிணைப்பாளர்களாக கே.டி.ராஜேந்திர பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளார்கள் போல தெரிகிறது.

அதிமுக - திமுகவினர் தவெகவில் தாமாக வந்து இணைவது குதிரை பேரம் கிடையாது. தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் அவர்கள் வருகின்றனர். குதிரை பேரத்தில் ஈடுபடுவது செந்தில் பாலாஜி தான்.

சிபிஐ எப்படி குதிரை பேர குற்றச்சட்டை நேரில் எடுத்து விசாரணை நடத்த முடியும். அது கூட தெரியாமல் டைம் பாசுக்காக சிபிஐக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. இப்போது வரை தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கவே அதிமுக திமுகவினர் இணைந்து முயற்சித்து வருகின்றனர்.

குதிரை பேரம்

அதிமுக - திமுக இணைந்து முயற்சித்து வருகின்றனர். அதிமுக - திமுக இணைந்து ஆட்சி இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததை விரும்பாமல் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர்.

இதை குதிரை பேரம் என கூறக்கூடாது. சோலார் நிலையம் அமைப்பதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும். சோலார் மின் நிலையம் அமைக்க ஒரு மெகாவாட்டுக்கு 25 லட்சம் கேட்டதாக திமுக ஆட்சி மீது என்னிடம் புகார் வந்தது. அதேபோன்று புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இரு மொழி கொள்கை

தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும். கவர்னர் குலக்கல்வி குறித்து கூற பேசலாம். அது அவரது விருப்பம். ஆனால் தமிழக அரசின் கல்விக்கொள்கை மாறாது. ஐபிஎஸ் அதிகாரி அருண் துறை மாற்றம் குறித்த முடிவு முதல்-அமைச்சர் அலுவலகத்தால் எடுக்கப்பட்ட முடிவு.

தமிழகத்தில் ஒருபோதும் மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது. அரசு வக்கீல் நியமனம் ஒரு சில பகுதிகளில் மட்டும் நிலுவையில் உள்ளது. 80 சதவீதம் நியமனங்கள் நிறைவடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com