

சென்னை,
கடந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுக்கு 108 இடங்கள் கிடைத்தது. இருந்தபோதும் பெரும்பான்மை இல்லாததால், அந்த கட்சியால் உடனடியாக ஆட்சி அமைக்க இயலவில்லை. எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி யில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆத ரவு அளித்தன. அதைத்தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றார். அதனை தொடர்ந்து தவெக தலைமையிலான கூட்டணி அரசில் 23 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இந்தநிலையில், சட்டசபை தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் த.வெ.க-வின் முக்கிய நிர்வாகியான ப. ராஜ்குமார் எம்.எல்.ஏ.
தேர்தல் களம் சூடுபிடிப்பதற்கு முன்பாகவே, தனது கட்சித் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வேண்டும்; தானும் கடலூர் தொகுதியில் மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று ப. ராஜ்குமார் எம்.எல்.ஏ வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, இத்தேர்தலில் கட்சி மாபெரும் வெற்றி பெற்று விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, தனது நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக இந்தச் சிலைகளை அவர் வடிவமைத்துள்ளார்.
பாரம்பரிய முறைப்படி மண்ணால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட முதல்-அமைச்சர் விஜய் மற்றும் தனது நேர்த்திக்கடன் சிலைகளை அவர் ஆலயத்தில் வைத்துள்ளார். ஆலயத்தில் அர்ச்சகர்கள் முன்பாக சிலைகளுக்கு முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, மங்கள ஆரத்தியுடன் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டு நிகழ்வின் போது, கடலூர் மாவட்டத் தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உடனிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தன் தலைவனின் வெற்றிக்காக மண் சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய கடலூர் தொகுதி எம்.எல்.ஏ ப. ராஜ்குமாரின் இந்தச் செயல், த.வெ.க தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் ஆலயத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.