

சென்னை,
திமுக ஆட்சியில் கடந்த 2024-ம் ஆண்டு அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டது. 2024 செப்., 2ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த எ.வ.வேலு அதனை திறந்து வைத்தார்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை, பெஞ்சல் புயல் காரணமாக வேகமாக நிரம்பியது. இதனையடுத்து அந்த அணைக்கு வந்த சுமார் 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், பல இடங்களை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது
இதில், அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூரை இணைக்கும் பாலமும் தப்பவில்லை. ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம், கட்டிய மூன்றே மாதங்களில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளானது. இந்த பாலம் இடிந்து விழுந்ததற்கு, தமிழக அரசு சார்பில் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில் இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது திமுக ஆட்சியில் தரமற்ற முறையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 3 மாதங்களில் இடிந்து விழுந்ததாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 57 ஆயிரம் கன அடி தண்ணீரை தாங்கும் அளவுக்கு தான் கட்டப்பட்டது. திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத மழையால் சாத்தனூர் அணையில் 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்ததால், இயற்கை சீற்றத்தால் பாலம் உடைந்தது. இதற்கு கட்டிய பொறியாளர் மீது குறை சொல்ல முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கல்லணை கட்டியது சோழர்கள் காலத்தில், அந்த பாலம் இன்னமும் இருக்கிறது. ஆனால் கடந்த ஆட்சியில் மூன்று மாதத்தில் பாலம் இடிந்துள்ளது. வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அது குறித்து விவரம் தெரியவரும்” என்று அவர் கூறினார்.