உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? - பேச்சுவார்த்தையில் தவெக தீவிரம்

மாநகராட்சி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே தவெக விரும்புகிறது.
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? - பேச்சுவார்த்தையில் தவெக தீவிரம்
Published on: 

சென்னை,

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி தான், கிராமப்புறம் வரை உள்ள பெண்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடமும், தவெகவிற்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும்.

எனவே, மொத்தம் உள்ள உள்ளாட்சி பதவிகளில் 85 சதவீதம் வரை த.வெ.க.,வே களமிறங்க, கட்சி தலைமை விரும்புகிறது. மீதமுள்ள 15 சதவீதம் இடங்களை மட்டும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக இடங்கள் மற்றும் மேயர் பதவி உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கின்றன.

எனினும், அந்த கட்சிகளுடன் த.வெ.க., அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி15 சதவீதத்துக்கு ஒப்புக் கொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தவெக ஆட்சியில் அமர்வதற்கு பக்கபலமாக இருக்கும் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களைப் பெறுவதற்கு முடிவு செய்துள்ளன. மாநகராட்சிகள், நகராட்சிகள் சிலவற்றையும் தங்களுக்காக கேட்பதற்கும் கூட்டணி கட்சிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், மாநகராட்சி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே தவெக விரும்புகிறது.

இதுகுறித்து த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது:- வலுவான கட்டமைப்பு கொண்ட தி.மு.க., அ.தி.மு.க.,வை எதிர்கொள்ளும் வகையில், த.வெ.க., வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்களே, உள்ளாட்சி தேர்தல் பணிக்கு பொறுப்பேற்க உள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அமைப்புகளில் கிடைக்கும் பதவிகள், கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம். எனவே, வெற்றி வாய்ப்புள்ள இடங்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. த.வெ.க.,வுக்காக உழைத்தவர்கள், உள்ளூர் அளவில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும்.

முதல்-அமைச்சர் விஜய்யின் செல்வாக்கை மட்டும் நம்பி, உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்களை பெற முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் தான், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com