

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. 234 தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரம் தெரியவரும். இதன்மூலமாக தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வைப்புத்தொகையாக ரூ. 10,000 செலுத்த வேண்டும். சில வேட்பாளர்கள் தோல்வியடைவது மட்டுமின்றி, அவர்கள் செலுத்திய டெபாசிட் பணத்தையும் இழந்து விடுவர்.
டெபாசிட் பணத்தை இழக்காமலிருக்க, இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு வேட்பாளர் அவர் போட்டியிடும் தொகுதியில் மொத்தம் பதிவாகியுள்ள வாக்குகளில் 6-ல் 1 பங்கு, அதாவது 16.67 சதவீதம் வாக்குகள் பெற வேண்டும். இல்லையெனில், டெபாசிட் திரும்பக் கிடைக்காது. இதனோடு, அரசியல் அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும்.
இந்த டெபாசிட் தொகை, நாடாளுமன்ற தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு ரூ. 25,000, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 12,500-ஆகவும், சட்டம்ன்ற தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு ரூ. 10,000, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.5,000-ஆகவும் இருக்கும்.