மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடக்கும்?

காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6 பேர் மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடக்கும்?
Published on

சென்னை,

நாடாளுமன்றம் என்பது மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளை கொண்டது. மக்களவையில் 545 இடங்களும், மாநிலங்களவையில் 250 இடங்களும் உள்ளன. இதில், மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், மாநிலங்களவையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள்.

அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு மக்களவையில் 39 இடங்களும், மாநிலங்களவையில் 18 இடங்களும் உள்ளன. மக்களவை உறுப்பினர்களை பொதுமக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பது போல், மாநிலங்களவை உறுப்பினர்களை இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பார்கள். தற்போது, மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே, இந்த காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக முன்கூட்டியே, அதாவது ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இதைவைத்து பார்க்கும்போது, தி.மு.க.வுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அ.தி.மு.க.வுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது, தி.மு.க.வில் வைகோ, அப்துல்லா, வில்சன், சண்முகம் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அ.தி.மு.க.வில் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைகிறது. கடந்த முறை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாசின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

தி.மு.க.வை பொறுத்தவரை வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதால், கமல்ஹாசன் முதல் முறையாக நாடாளுமன்ற மாநிலங்களவைக்குள் நுழைவார் என்று தெரிகிறது. மற்ற 2 பேர் யார்?, வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதே நேரத்தில், அன்புமணி ராமதாஸ் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாததால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், பா.ம.க. உறுப்பினர்களின் 5 பேரின் வாக்கும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது என்றே தெரிகிறது. என்றாலும், 2 மாநிலங்களவை உறுப்பினர்களை அ.தி.மு.க.வால் தேர்ந்தெடுக்க முடியும். எனவே, அக்கட்சியில் 2 இடங்களைப்பெற போட்டா போட்டி நிலவுகிறது.

காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6 பேர் மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது. விண்ணப்பித்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். அதற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் மட்டுமே தேர்தல் நடைபெறும். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவுதான்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com