குடும்பம் நடத்த வர மறுத்ததால் பெண்ணின் கால்களை வெட்டிய கணவர் கைது

தகராறில் ஆத்திரம் அடைந்த பிஜூ மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை மல்லிகாவின் முகத்தில் தூவினார்.
குடும்பம் நடத்த வர மறுத்ததால் பெண்ணின் கால்களை வெட்டிய கணவர் கைது
Published on

நீலகிரி

கேரளம் மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் பிஜூ (வயது 43). இவரது மனைவி கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா (33). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மல்லிகா கோபித்து கொண்டு கண்ணூரில் இருந்து தனது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.அங்கு கடந்த சில மாதங்களாக அவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று பிஜூ காரில் பந்தலூருக்கு வந்தார். பின்னர் மல்லிகாவை சமாதானப்படுத்தி கண்ணூருக்கு அழைத்து செல்வதற்காக, அவரிடம் பேசி உள்ளார். பின்னர் தம்பதி காரில் வயநாடு மாவட்டம் மேப்பாடி வரை சென்றனர். இதையடுத்து அங்கிருந்து பந்தலூர் நோக்கி வந்தனர்.

காருக்குள் வைத்து வெட்டினார்

பின்னர் மேங்கோரேஞ்ச் முனீஸ்வரன் கோவில் அருகே பிஜூ காரை நிறுத்தி விட்டு, மல்லிகாவிடம் குழந்தைகளுடன் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே காருக்குள் வைத்து மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிஜூ மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை மல்லிகாவின் முகத்தில் தூவினார். பின்னர் கத்தியால் தனது மனைவியின் 2 கால்களை வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மல்லிகா வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் அவரை பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிஜூ அனுமதித்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் மல்லிகா அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு கல்யாணகுமார். தேவாலா இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால், அவரது கால்களை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. மேலும் கால்களை வெட்டியாவது சொந்த ஊருக்கு மனைவியை அழைத்து சென்று விடலாம் என எண்ணி இந்த செயலில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். பிஜூவை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com