மண்எண்ணெய் ஊற்றி மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த கணவர்; நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்

மண்எண்ணெய் ஊற்றி மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மண்எண்ணெய் ஊற்றி மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த கணவர்; நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்
Published on

சென்னை கொளத்தூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் சிவராமன்(வயது 50). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜீவ லட்சுமி (42). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு மாவு கடையில் வேலை செய்து வருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த சிவராமன், அடிக்கடி குடிபோதையில் வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிவராமன், மனைவி ஜீவலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த சிவராமன், சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து ஜீவலட்சுமி தலையில் ஊற்றி தீ வைத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

உடல் முழுவதும் தீ பரவியதால் ஜீவலட்சுமி வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜீவலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவராமனை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com