தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே டேஞ்சர் தான்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே டேஞ்சர் தான்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. கருத்துக்கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் (23-ம் தேதி) நடைபெறவுள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.

தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தற்போது கோடையின் வெப்பம் அதிகமாக இருந்தாலும், தலைவர்கள்-வேட்பாளர்களின் பிரசாரங்கள் அதனை விட அனல் கக்கியது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று, அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடியோ பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்…

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள். கலைஞரை விட More Danger என என்னை சொல்லும்போது ஒன்றே ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றுமே Danger தான். பா.ஜ.க. மாதிரியான மதவாத கட்சிகள், திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். திமுக ஒருபோதும் இந்துக்களுக்குஎதிரான கட்சி அல்ல.

சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் துணை நிற்பதும் திமுகதான். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாஜக வெல்ல முடியாது என்பதை வரலாறு சொல்லும்.

நமது உரிமை, கலாச்சாரம், மொழியை அழிக்க நினைக்கும் பாஜக, அவர்களின் அடிமைகள் தமிழ்நாட்டுக்கு வேண்டாம். திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.7,000 கோடிக்கும் அதிகமான திருக்கோவில் சொத்துகளை மீட்டுள்ளோம். திமுக ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம்.

ஸ்டாலின் சார், இந்த 5 வருசத்துல மக்களுக்கு என்ன பண்ணிருக்கீங்க?.. அப்படினு யாராவது கேட்டா, மணிக் கணக்கா, நாள் கணக்கா பேச முடியும். எத்தனை பிரச்சினை வந்தாலும் தமிழகத்தை பாதுகாப்பேன்.

நம்ம ஆட்சியில் குறைகளாக சொல்லப்பட்ட சில விசயங்களில் கூட, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது ரொம்பவே Better-ஆ நாம இருக்கோம். இருந்தாலும் அந்தக் குறைகளையும் சரிசெய்ய எல்லா வழிமுறைகளையும் நாம செஞ்சுட்டோம். அதனுடைய விளைவுகளை இன்னும் கொஞ்ச நாளில் நாம் பார்ப்போம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் எதிர்காலமும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com