தங்கக் கடனுக்கான நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - சு. வெங்கடேசன்

தங்கக் கடனுக்கான நிபந்தனைகளை தளர்த்தியிருப்பது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த வெற்றி என்று சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தங்கக் கடன் பிரச்சினையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வெளியிட்டிருப்பது எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தங்கக் கடன் பிரச்சினையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினை சம்பந்தமாக மத்திய நிதி மந்திரியிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் வந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது கோரிக்கைகள்:

1. தங்க நகைக்கான உடைமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.

2. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85 சதவீதமாக உயர்த்தப்படும்.

3. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.

4. முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.

இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும். முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்வேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com