

நெல்லை,
விஜய் குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது, "அரசியலில் பாவம் அவருக்கு அனுபவம் இல்லை. முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்தால் தான் என்ன நடக்கிறது என்பது தெரியும்” என்றார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, நடிகை திரிஷா, நயினார் நாகேந்திரன் கருத்து தொடர்பாக தனது வழக்கறிஞர் வாயிலாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் “மாநில அரசியலில் உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி பேசலாமா? என்றும், இப்படி ஒரு அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. அவமரியாதையை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்க வேண்டாம். அரசியல் நிலைப்பாட்டில் நடுநிலையுடன் இருக்கவே நான் விரும்புகிறேன். தனக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் என்னை தொடர்புபடுத்தி பேச வேண்டாம். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று மதுரையில் பேசிய நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் திரிஷா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தனிப்பட்ட முறையில் யார் மனதும் புண்படும் வகையில் பேசமாட்டேன்” என்றார்.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “எந்த ஒரு தனி மனித விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதுமில்லை. நான் பேசியதுமில்லை. அன்றையதினம் வாய் தவறி வந்த வார்த்தை. அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இது குறித்து என்னிடம் பேசினார். யாரேனும் இந்த விவகாரத்தில் வருத்தப்படுகிறார்கள் என்றால், என் வருத்தத்தை நான் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.