

சென்னை,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு என் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று நேரடியாக நான் சம்பந்தப்பட்ட வழக்கில் கடந்த 3 மணிநேரமாக குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மீது நான் தொடர்ந்த அவதூறு வழக்கு அவர் வராததால் அடுத்த ஒரு தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் குறைந்தபட்சமான வழக்கில் மட்டும்தான் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அதனை எடுத்து நேரடியாக வாதிடுவார்கள். எனக்கு திமுக செய்திருக்கக்கூடிய ஊழல், நாங்கள் வெளியிட்டிருக்கும் திமுக பார்ட் 1, பார்ட் 2. டி.ஆர்.பாலு மீது நான் சுமத்தியிருக்கும் குற்றம். அனைத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும் காரணத்தால் நானே நேரடியாக ஆஜராகி வாதிட்டேன்.
டி.ஆர்.பாலுவுக்கு, 2.15 மணிக்கு விமானம் இருந்ததால், 3 மணி நேரத்திற்கு பிறகு இன்று குறுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.பாரதியின் வழக்கு மார்ச் 10 நடைபெறுகிறது.
தொடர்ந்து இந்த வழக்கை நானே வாதாட இருக்கிறேன். அடுத்து வரக்கூடிய குறுக்கு விசாரணையின் போது இன்னும் நிறைய கேள்விகளை கேட்க இருக்கிறேன். டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளை டி.ஆர்.பாலு மீது மற்றும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்போகிறோம். அந்த வழக்கின் போது நான் அரசியல் வந்த பிறகு வாங்கிய சொத்துக்கள் எதாவது இருந்தால் அது அனைத்தும் பொதுப்படையில் இருக்கும். கடன் வாங்கி இருக்கிறோமா அதுவும் பொதுப்படையில் இருக்கும். டி.ஆர்.பாலு மீது நான் தொடர உள்ள புது வழக்கு என்பது பொதுவெளியில் தமிழக மக்களுக்கு எல்லாத்தையும் சொல்வதற்காக பயன்படுத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.