

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு மலிவான அரசியல் ஆதாயத்திற்காகவும், ஊடக வெளிச்சத்திற்காகவும் என் மீது மதவாதி என்ற முத்திரையைக் குத்த நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியதை முழுமையாகப் புரிந்துகொள்ளாமலோ. அல்லது அரசியல் லாபத்திற்காக வேண்டுமென்றே திரித்துப் பேசி தமிழக மக்கள் மத்தியில் நஞ்சை விதைக்கப் பார்ப்பது உங்களின் இயலாமையையே காட்டுகிறது.
கிறிஸ்தவ மதத்தின் புனிதத் தலங்களாகப் போற்றப்படும் பெத்லகேம் (Bethlehem). ஜெருசலேம் (Jerusalem) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய புனித பூமிக்கு நான் நேரில் சென்று வந்தவன், அதேபோலவே, இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவுக்கு மாற்று மதத்தினர் செல்ல அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நேரில் சென்று பார்த்து வந்தவன் நான். எல்லா மதங்களின் மீதும் எனக்குள்ள உளப்பூர்வமான மதிப்பும் மரியாதையும் தான் வாழ்நாளில் அந்தப் புனிதத் தலங்களைத் தரிசிக்க வேண்டும் என்ற என் எண்ணத்திற்குக் காரணம், நான் தம்பி மாணிக்கம் தாகூர் அவர்களைக் கேட்கிறேன். மதச்சார்பற்ற வேடமிட்டுத் திரியும் நீங்கள். உங்கள் வாழ்நாளில் இதுபோன்ற பிற மதப் புனிதத் தலங்களுக்குச் சென்று உண்மையான நல்லிணக்கத்தை உணர்ந்தது உண்டா?மதச்சார்பற்ற அரசு' என்று வாய்கிழியப் பேசும் நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சியினரும். உண்மையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறீர்கள். அதற்கு சமீப காலமாகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களே சான்றாகும். இந்து மதத்தின் நம்பிக்கைகளையும். சடங்குகளையும் இழிவுபடுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு, என்னை மதவாதி என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. நான் கோவிலுக்குச் செல்வது எப்படி மதவாதமாகாதோ, அதேபோல்தான் எனது மத நம்பிக்கைகளைப் போற்றுவதும், தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாத்துப் பேசுவதும் ஆகும். என் பேச்சில் ஒருபோதும் வன்மம் இருந்ததில்லை.
தமிழகத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்கும் உணர்வு மட்டுமே எப்போதும் உண்டு, ஆனால், உண்மையான மதவாதம் என்பது உங்கள் காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலேயே ஊறிப்போன ஓட்டு வங்கி அரசியல்தான். நான் பேசியதன் அர்த்தம் புரியாமல், பொதுவெளியில் வாய்க்கு வந்தபடி பொய்களைப் பேசி மக்களை ஏமாற்றலாம் என்று தம்பி மாணிக்கம் தாகூர் தப்புக் கணக்குப் போட வேண்டாம். பிரித்தாளும் சூழ்ச்சியால் காலத்தை ஓட்டிவிட்ட காங்கிரஸ் கட்சியின் போலி முகமூடி இன்று தமிழக மக்கள் முன்னிலையில் முற்றிலுமாகக் கிழிந்து தொங்குகிறது. மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி. அதில் குளிர்காய நினைக்கும் உங்களின் அரசியல் நாடகங்கள் தமிழக மக்களிடம் இனியும் எடுபடாது. பொய்ப் பிரசாரங்களை விட்டுவிட்டு, மக்கள் நலப் பணிகளிலும் உண்மையான தேசப்பற்றிலும் கவனம் செலுத்துங்கள் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.