மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்: எடப்பாடி பழனிச்சாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்: எடப்பாடி பழனிச்சாமி
Published on

சென்னை,

எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை மந்திரி அமித்ஷா அவர்களுக்கும், மத்திய மந்திரிகளான பியூஸ் கோயல் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் நபின் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் அவர்களுக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் ஏ.சி. சண்முகம் அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் பீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com