கட்சி சார்பின்றி செயல்படுவேன் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்போம் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கட்சி சார்பின்றி செயல்படுவேன் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
Published on

சென்னை,

17-வது சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைவரும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டனர்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக, சட்டசபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் யாரும் போட்டியிடாததால் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை மரபுப்படி அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இரு கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் சட்டமன்ற கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர், முதல்-அமைச்சர் ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழி வந்தவன் நான். முதல்-அமைச்சர் விஜய்யை தமிழக மக்கள் இன்னொரு எம்.ஜி.ஆராக பார்க்கிறார்கள். தேர்தலில் அலை வந்தது; அது விஜய் அலை; வெற்றி அலை; விசில் அலை. எவ்வளவோ பிரச்சினைகள் வந்த போதும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி விட்டார் விஜய். சாதி, மதம், இனம் பார்க்காமல், பணம் பெறாமல் மக்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர்.

போதையில்லா தமிழ்நாட்டை முன்னெடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அவையின் உண்மையான எஜமானர்கள் மக்கள் தான். தமிழ் மொழி வெறும் அடையாளம் அல்ல; தமிழ் மொழிக்கே அவையில் முதலிடம். அனைவர் நலனும் இந்த அவையின் சிந்தையாக இருக்க வேண்டும்.

கட்சி சார்பின்றி நான் செயல்படுவேன்; அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பேன். தரமான விவாதங்கள் நடக்கும். அவையின் மாண்புகளை காப்போம்; தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்போம். அரசியல் மோதல்களுக்காக மக்கள் நம்மை அவைக்கு அனுப்பவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com