இடைத்தேர்தல்: தாராபுரம் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் இன்று ‘ரோடு ஷோ’

இறுதிக் கட்ட பிரசாரத்தில் கட்சித்தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

திருப்பூர்,

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து, முதல்-அமைச்சர் விஜய் இன்று 'ரோடு ஷோ' மேற்கொள்கிறார்.

தாராபுரம் இடைத்தேர்தல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் த.வெ.க.. தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 22 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாராபுரம் தொகுதி முழுவதும் இரவு, பகலாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் தாராபுரத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் 'ரோடு ஷோ'

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இறுதிக் கட்ட பிரசாரத்தில் கட்சித்தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, முதல்-அமைச்சர் விஜய் ஏற்கனவே பிரசாரம் செய்தார். 2-வது முறையாக இன்று 'ரோடு ஷோ' மூலம் அவர் பரப்புரை மேற்கொள்கிறார்.

ஹெலிபேடு தளம்

தாராபுரத்தில் இருந்து மூலனூர் வரை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு 'ரோடு ஷோ' செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 11 மணி அளவில் தாராபுரம் மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு சென்றடைகிறார். பிரசார வேனில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உடுமலை ரவுண்டானா சந்திப்புக்கு வருகை தருகிறார். பின்னர் பெரியார் சிலை சந்திப்பு, 5 சாலைகள் சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதிகளில் 'ரோடு ஷோ' செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், வஞ்சியம்மன் கோவில் ஆகிய இடங்களில் 'ரோடு ஷோ' மேற்கொள்கிறார். அதன்பிறகு மீண்டும் அதே வழியில் மாருதி நகர் சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை செல்கிறார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை புறப்படுகிறார்.

போலீஸ் ஐ.ஜி.ஆய்வு

முதல்-அமைச்சர் 'ரோடு ஷோ'வையொட்டி அவர் செல்லும் வழிநெடுகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தாராபுரம் மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தை கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com