பள்ளி மாணவர்கள் சரியாக முடி வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்து விடுங்கள் -அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு

ஒருவரின் தோற்றம் தான் அவரின் குணத்தை காண்பிக்கிறது என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறினார்.
அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு
Published on: 

விருதுநகர்,

முறையில்லாமல் முடி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மொட்டை அடித்துவிடலாம் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூகம் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது:-

இன்றைய சிறுவர்கள் முடி வெட்டுவதை பார்த்தால் எனக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. குழந்தைகள் பள்ளிக்கு போகிறவர்கள் போன்று முடியை வெட்டுவது கிடையாது. சிலர் ரவுடிகள் மாதிரி வெட்டுகிறார்கள்.

பள்ளி மாணவர்கள் முடி வெட்டுபதை சரி செய்ய வேண்டும். ஒழுங்காக முடி வெட்டும் குழந்தையை மட்டும் பள்ளிக்குள் அனுமதியுங்கள். சரியாக வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்து விடுங்கள். அதில் தவறே கிடையாது. நம் வீட்டுப் பிள்ளையாக நினைத்து இதைச் சொல்கிறேன். முதல் தவறே அங்கிருந்துதான் தொடங்குகிறது.

இரண்டாவது கணுக்காலுக்கு மேல் பேண்ட் போடுகிறார்கள். ஏதேனும் பிரச்னையில் சிக்கி, பள்ளி மாணவர்கள் காவல் நிலையம் சென்றால், அங்கே மாணவனின் தோற்றத்தை பார்த்தவுடன் அவரை தவறு செய்தவர் என்று காவலர்கள் உறுதி செய்துவிடுகிறார்கள்.

இதில் காவலர்களின் தவறு எதுவும் இல்லை. மாணவரின் தோற்றம்தான் அவர்களை அப்படி உறுதி செய்ய வைக்கிறது. ஒருவரின் தோற்றம் தான் அவரின் குணத்தை காண்பிக்கிறது. மாணவர் தவறு செய்தாரா? இல்லையா? என்பதெல்லாம் விசாரணைக்கு பிறகு முடிவாகும். ஆனால், பார்த்தவுடன் அவரின் தோற்றத்தால் தவறான எண்ணம் உருவாகிறது” எனத் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே மொட்டை அடித்துவிடுங்கள் என்று அமைச்சர் பேசியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

X