கவர்னர் மாளிகை அரசியல் சாசனத்திற்கு விரோதமாக களம் இறங்கினால்.. - மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்கை!

கவர்னர் மாளிகையே களமிறங்கும் என்று சவால் விடுப்பது கவர்னர் பதவிக்கு அழகல்ல என பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
பெ. சண்முகம்
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கவர்னர் மதுரை ஆய்வு

பாஜக நியமித்த கவர்னர்கள் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு இணையாக போட்டி அதிகார மையமாக, கூட்டாட்சிக்கு விரோதமாக செயல்படுகிற வேலையையே தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத அர்லேகரும் ஆரம்பித்திருக்கிறார் என்பதையே அவரது மதுரை ஆய்வுக் கூட்டமும், வைகை ஆறு சீரமைப்பு பற்றிய அவரது கருத்தும் வெளிப்படுத்தியுள்ளது.

கவர்னர் என்பது நியமனப் பதவி என்ற எல்லைகளுக்குள் நிற்காமல் ஆய்வுக் கூட்டங்கள், நேரடியாக நிர்வாக நடைமுறைகளில் தலையிட முயற்சிப்பது என்பதெல்லாம் பன்வாரிலால் புரோகித் காலத்தில் துவங்கி ஆர்.என்.ரவி காலத்திலும் தொடர்ந்து கடும் எதிர்ப்புக்கு ஆளானது. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் கவர்னர் அத்துமீறுவது மையத்தில் அதிகாரத்தில் குவிப்பதென்ற பாஜக நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே ஆகும். இது அவர்களுக்கு ஒப்பளிக்கப்பட்ட அரசியல் பணி என்ற முறையிலேயே ஆர்லேகர் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய அரசாங்க உருவாக்கத்திலேயே அவரது நடவடிக்கைகளில் சந்தேக நிழல் படர்ந்தது. அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு மாறாக அரசாங்க உருவாக்கத்தை இழுத்தடித்தார் என்பதை தமிழ்நாடு கண்டது. முழு நேர கவர்னரே கூட இந்த நெறிகளை மீற முடியாது என்ற நிலையில், பொறுப்பு கவர்னராகத்தான் இருக்கிறோம் என்ற குறைந்தபட்ச கட்டுப்பாடு கூட அவரிடம் இல்லை என்பதும் கண்டனத்திற்குரியது.

நேற்று மதுரையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தை ஆர்லேகர் நடத்தியுள்ளார். அது முடிந்து மதுரையில் "வேர்களைத் தேடி" என்ற நிகழ்ச்சியில் பேசும் போது வைகை ஆற்றை மதுரை இளைஞர்கள் மீட்டெடுக்க வேண்டும்; அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால் கவர்னர் மாளிகையே வைகையை சீரமைக்க களமிறங்கும் என்று பேசி உள்ளார்.

இளைஞர்களுக்கு வைகையை சீரமைக்க வேண்டுகோள் விடுப்பது தவறில்லை; ஆனால் கவர்னர் மாளிகையே களமிறங்கும் என்று சவால் விடுப்பது கவர்னர் பதவிக்கு அழகல்ல, அரசியல் சாசனம் அவருக்கு தந்துள்ள அதிகாரமும் அல்ல. இந்திய நாட்டின் கூட்டாட்சி கோட்பாடு பற்றி அவர் இதன் மூலம் இளைஞர்களுக்கு தருகிற செய்தியும் அபத்தமானது ஆகும்.

எச்சரிக்கை

கவரனர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நேதாஜியின் ஐ.என்.ஏ "வேர்களைத் தேடி" என்பது குறித்தது ஆகும். ஆனால் அங்கு போய் தேச பக்தி என்பது களத்தில் போய் போரிடுவது மட்டுமே அல்ல என்று அவர் தந்துள்ள விளக்கம் அவருக்கு ஆசி வழங்குகிற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி நின்றதை மறைப்பதே ஆகும். ஆகவே தலைப்புக்கு நியாயம் வழங்குவதற்கு பதிலாக கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக பேசி சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டுள்ள பாஜக குறுக்கு வழியில் கவர்னரைப் பயன்படுத்தி அதிகாரத்தை சுவைக்கிற முயற்சியே அன்றி இது வேறில்லை.

கவர்னர் அர்லேகரின் மதுரை ஆய்வுக் கூட்டம், அவரின் சர்ச்சைக்குரிய உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கவர்னர் தன்னுடைய அரசியல் சாசன விரோதப் போக்கை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இவ்வாறு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் கூட்டாட்சி கோட்பாடுகளை பாதுகாப்பதற்கு தமிழ்நாட்டின் இடதுசாரி, ஜனநாயக சக்திகள் களமிறங்கும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு எச்சரிக்கை விடுக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com