

சென்னை,
முரசொலியில் மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ.சண்முகம் குறித்து எழுதப்பட்டிருப்பதை கண்டித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ.சண்முகம் குறித்து முரசொலியில் எழுதப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அநாகரிகத்தின் உச்சம்.. தனது வாழ்வையும், வசதியையும் ஏழை, எளிய மக்களுக்காக அர்ப்பணித்தவர் பெ.சண்முகம். காவேரி கரையோரம் பிறந்து அந்த சிவப்பு துண்டை தோளில் ஏந்தி அவர் களமாடியதும், போராடியதும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது.
பெ.சண்முகம் செய்ததை ஒரு ஆயுளில் ஒரு மனிதன் செய்யமுடியாது. அப்படிப்பட்ட மாமனிதரை பற்றி யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்; அரசியல் முரண்பாடு இருக்கலாம்; ஆனால் முரசொலியில் என்ன என்னவோ எழுதி வைத்திருக்கிறார்கள். டானிக் குடித்து வளர்ந்தவர்... அவர்களை போல (திமுகவினர்) டாஸ்மாக் டானிக் குடித்து வளர்ந்தவரா?. இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்கிறார்கள்.
அரசியல் என்பது நாகரிகத்தின் எல்லையில் இருக்க வேண்டும். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இதை வன்மையாக கண்டித்து இருப்பார். நாகரிக அரசியலை நோக்கி திரும்ப வேண்டும். சி.வி.சண்முகமும், பெ.சண்முகமும் ஒன்று என்று முரசொலி எழுதுகிறது என்றால் எவ்வளவு பெரிய வன்மம். சி.வி.சண்முகம் அவருடைய அரசியலில் அதிமுகவில் களமாடி வருகிறார்; அவரை சிறுமைப்படுத்த பயன்படுத்துகிறீர்கள் என்றால்; அவர் குறித்து உங்கள் (முரசொலி) மதிப்பீடு என்ன.
சி.வி.சண்முகத்தோடு பெ.சண்முகத்தை ஒப்பீடு செய்வதால் பெ.சண்முகத்தின் மதிப்பீடு என்ன.. தவெக சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம். சிவப்பு துண்டை இதுபோல சிறுமைப்படுத்தினால் இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது. மூத்த கம்யூனிஸ்ட் தோழரை ஒன்று, இரண்டு, மூன்று என சிந்துபாத் கதை போல வன்மத்தை கக்குவது முறையா?. அனைவரும் நாகரிகத்தின் எல்லையை கருதி அதோடு நிற்க வேண்டியது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.