கொறடா உத்தரவை மீறினால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் - எடப்பாடி பழனிசாமி தரப்பின் எம்.பி. இன்பதுரை

எடப்பாடியார் நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானதாகும் என்று தெரிவித்துள்ளார்.
கொறடா உத்தரவை மீறினால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் - எடப்பாடி பழனிசாமி தரப்பின் எம்.பி. இன்பதுரை
Published on

சென்னை,

அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. இன்பதுரை (எடப்பாடி பழனிசாமி தரப்பு) தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.

சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.

சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் சுப்ரீம்கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி:

“ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.”

மேலும், சுப்ரீம்கோர்ட்டு “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். எனவே, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com