

சென்னை,
மாநிலத்தின் தொழில்துறை சூழல் அமைப்பு முழுவதும் டிஜிட்டல் உருமாற்றம், செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) பயன்பாடு மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பணியகத்துடன் சென்னை ஐ.ஐ.டி. கைகோர்த்துள்ளது.
வால்மார்ட் குளோபல் டெக் சார்பில் வழங்கப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) மானியத்தின் ஆதரவுடன், சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்நுட்ப சிறப்பு மையம் இந்தக் கூட்டு முயற்சிக்குத் தலைமை தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிககத்தில் உற்பத்தி, சில்லறை வர்த்தகம் மற்றும் அது சார்ந்த துறைகளில் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்படும் தீர்வுகள் குறைந்த செலவிலும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டு முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பணியகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. இடையே இன்று கையெழுத்தாகியுள்ளது.