காசிமேடு மீனவர்களின் 7 விசைப்படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி

மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க முதல்-அமைச்சர் உடனடியாக முயற்சிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
காசிமேடு மீனவர்களின் 7 விசைப்படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை

ஆந்திர மாநில காவல்துறை மற்றும் மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.வெ.க. அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

தமிழக மீனவர்கள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800 விசைப்படகுகளும், 2 ஆயிரம் பைபர் படகுகளும் தங்குதளமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கான மீன் இறைச்சி தேவையை இவர்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றனர்.

மீன்பிடித் தொழில்

இங்கு பிடிக்கப்படும் மீன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, நமது நாட்டிற்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 30,000 வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காசிமேடு மீனவர்களின் மீன்களை நம்பியுள்ளனர்.

சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்து சென்றாலும், இவர்களது வாழ்விடம் ஆந்திராவை ஒட்டி இருப்பதால், எப்போதும்போல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் அமைதியாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 50 வருடங்களாக ஆந்திர மீனவர்களும், தமிழக மீனவர்களும் சகோதரர்களாக மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். தமிழக மீன்பிடி படகுகளில் ஆந்திராவைச் சேர்ந்த மீனவத் தொழிலாளர்கள் பெருமளவு பணிபுரிந்து வருகின்றனர்.

7 விசைப்படகுகள்

இந்நிலையில், ஆந்திர மாநில அரசு தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஆந்திர கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யக்கூடாது என்று கூறி, 17.6.2026 அன்று காசிமேடு துறைமுகத்தைச் சேர்ந்த 7 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். இன்றுவரை அந்த 7 விசைப்படகுகளை ஆந்திர அரசு விடுவிக்கவில்லை.

வாழ்வாதாரம் பாதிப்பு

காசிமேடு மீனவர்கள், த.வெ.க. அரசு மற்றும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை தமிழக அரசு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காசிமேடு மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகு உரிமையாளர்களும், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவத் தொழிலாளர்களும், மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல இயலாமல், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை

எனவே, ஆந்திர அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிக்க த.வெ.க. அரசின் முதல்-அமைச்சர் உடனடியாக முயற்சிக்க வேண்டும். இனியும் காசிமேடு மீனவர்களை, ஆந்திர அரசு அதிகாரிகளால் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com