

சென்னை,
பெருந்தலைவர் மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடகா அரசின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது இதுகுறித்த விபரம் வருமாறு:-
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ASG திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநில அமைப்பு செயலாளர் புழல் A.தர்மராஜ் தொடக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்து நடைபெற உள்ளாட்சி தேர்தல் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் செயல்பாடுகள், பங்களிப்பு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நிறைவாக கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களின் விளக்க உரையை ஏற்று கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை டெல்டா பகுதியை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுத்து, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேவையான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் அன்று தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் விஜய் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு நேரில் வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செய்தமைக்கு இக்கூட்டம் முதல்-அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது. அதேபோன்று அவரது நினைவு நாளான அக்டோபர் 2-ம் தேதி கிண்டியிலுள்ள காமராஜரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திட வேண்டும் என்று இக்கூட்டம் முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறது.
ஆந்திரப்பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கள் இறக்கும் பனைத் தொழிலாளியின் குடிலுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்துடன் பேசி மகிழ்ந்து கள் குடித்து பனைத் தொழிலாளியை உற்சாகப்படுத்தியதும், அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்றுக் கொள்ள அனுமதி வழங்கியிருப்பது போல் தமிழ்நாட்டிலும், பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள், பதநீர் இறக்கி விற்றுக்கொள்ள பனைத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை வருகிற செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா, அச்சம் அகற்றிய அண்ணல் WPA.சௌந்தரபாண்டியனார் ஆகியோரின் பிறந்தநாள் முதல் இத்திட்டம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு விரிவுபடுத்தியும் இத்திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்டியும் அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
மத்திய அரசு நடத்திய நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்து கேள்விகள் வெளியானதில் நடந்த முறைகேட்டை கண்டித்து டெல்லியில் நடந்த மாணவர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்லி காவல்துறை தண்ணீர் பாய்ச்சியும், தடியடி நடத்தியும் மாணவர்களை காயப்படுத்தியதில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
நிறைவாக விழுப்புரம் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.செந்தில்குமார் நன்றி கூற இனிதே முடிந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.