பழனி மலைக்கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: தரிசன நேரம் மாற்றம்

விஜயதசமி விழாவை முன்னிட்டு, 20-ந் தேதி காலை 11.30 மணியளவில் அனைத்து தரிசன கட்டணச்சீட்டுகளும் நிறுத்தப்படும்.
பழனி
Published on: 

பழனி,

பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி, வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான விஜயதசமியன்று 20-ந்தேதி கோதைமங்கலத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அம்பு போடும் நிகழ்ச்சி

இதையொட்டி, அன்றைய தினம் மலைக்கோவிலில் நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் சன்னதி திருக்காப்பிடப்பட்டு, பராசக்தி வேல் புறப்பாடாகி பெரியநாயகி அம்மன் கோவிலை சென்றடையும்.

அங்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பராசக்தி வேலுடன் கோதைமங்கலத்துக்கு புறப்பட்டு சென்று, கோதீஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

சாமி தரிசனம்

விஜயதசமி விழாவை முன்னிட்டு, 20-ந் தேதி காலை 11.30 மணியளவில் அனைத்து தரிசன கட்டணச்சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோதைமங்கலத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி முடிந்து, பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு திரும்பியதும் அர்த்தசாம பூஜை நடைபெறும். வருகிற 21-ந் தேதி முதல் மலைக்கோவிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறுவதுடன், பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com