ஜனவரி 15-ந் தேதி கடைசி நாள் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டண முறைக்கு அவகாசம் நீட்டிப்பு

சுங்கச்சாவடிகளில் ‘பாஸ் டேக்’ கட்டண முறைக்கு ஜனவரி 15-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 15-ந் தேதி கடைசி நாள் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டண முறைக்கு அவகாசம் நீட்டிப்பு
Published on

சென்னை,

சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாஸ்டேக் என்ற மின்னணு முறையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் முறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமல்படுத்தியது. இதற்காக சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளிலேயே பாஸ்டேக் அட்டை வினியோகிக்கப்பட்டது. சில வங்கிகளிலும் பாஸ்டேக் அட்டை வினியோகம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்தி பாஸ்டேக் அட்டை பெற வேண்டும்.

இதன்படி முகப்பு கண்ணாடியில் பாஸ்டேக் அட்டை ஒட்டப்பட்ட வாகனம் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது, அங்குள்ள சென்சார்கள் மூலம் பாஸ்டேக் அட்டை ஸ்கேன் செய்யப்பட்டு, வாகன உரிமையாளரின் பாஸ்டேக் அட்டையில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பாஸ்டேக் அட்டையில் உள்ள பணம் குறைந்தால் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம் நேற்று அமலாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாவே வாகன ஓட்டிகள் பாஸ்டேக் மின்னணு அட்டை வாங்குவதிலும், ரீசார்ஜ் செய்வதிலும் ஆர்வம் காட்டி வந்தனர்.

ஆனால் பல இடங்களில் பாஸ்டேக் மின்னணு அட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த திட்டம் அமல்படுத்துவதில் மேலும் கால அவகாசம் தேவை என வாகன உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

வாகன உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று பாஸ்டேக் திட்டத்தை அமல்படுத்துவதை மேலும் ஒரு மாதத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தள்ளிவைத்து உள்ளது. ஜனவரி 15-ந் தேதிக்குள் அனைவரும் பாஸ்டேக் அட்டை வாங்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com