

சென்னை,
தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இரு சக்கர வாகனங்களில், அரிவாள், பட்டாகத்திகளுடன் வந்த ஒரு கும்பல், கண்ணில் கண்டவர்களை எல்லாம் வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நுழைந்த கும்பல், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வன்முறை சம்பவங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. குற்றவாளிகளுக்கு காவல் துறை மீது துளியும் அச்சம் இல்லாததே இதுபோன்ற வன்முறை சம்பங்களுக்கு காரணம். தமிழகத்தில் நகரங்கள் மட்டுமல்லாது குக்கிராமங்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன.
இதுவும் வன்முறைக்கு காரணமாக உள்ளன. ஆனால், போதைப் பொருட்களை ஒழிக்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குற்றவாளிகளை ஒடுக்குவதில், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில், போதைப் பொருட்களை ஒழிப்பதில் காவல்துறையின் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை மக்கள் தோற்கடிக்கப் போவது உறுதி.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.