முதியவர்களை குறிவைத்து நடக்கும் கொலை, கொள்ளைகள் அதிகரிப்பு - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கவலை

முதியவர்களை பாதுகாப்பது அரசின் கடமை என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரையைச் சேர்ந்த் ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் வயதானவர்களை பஸ் நிலையங்கள், சாலை ஓரங்கள் போன்ற இடங்களில் அவர்களது பிள்ளைகளும், உறவினர்களும் தனியே விட்டுச்செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார குறைபாடுகளால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு முதியோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவர்களை போன்றவர்களை பாதுகாப்பதற்காக தேசிய முதியோர் மையங்களை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டுதல்கள் உள்ளன.

ஆனால் இந்த மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் முறையாக அமைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே ஏராளமான முதியவர்கள் ஆதரவற்று, பாதுகாப்பற்ற நிலையில் சாலையோரங்களில் இருக்கும் அவலம் ஏற்படுகிறது. இந்த நிலையை தவிர்க்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியகிளாட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "வயதானவர்களை குறிவைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. முதியோருக்காக அமைக்கப்பட்டு உள்ள மையங்களிலும், அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படுவதில்லை. முதியவர்களை பாதுகாப்பது அரசின் கடமை" என கருத்து தெரிவித்தனர்.

பின்னர் மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, "முதியோர் மையங்களை அமைப்பதற்கான நிதி மட்டும்தான் மத்திய அரசு வழங்க முடியும். முதியோர் இல்லம் அமைப்பது மாநில அரசின் பணியாகும்" என்றார். அதற்கு நீதிபதிகள், ''இந்த நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது மத்திய அரசின் வேலை தானே?" என கேள்வி எழுப்பினர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், "மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே இந்த வழக்கில் மத்திய சமூக நலத்துறையின் முதன்மை செயலாளர், தமிழக அரசின் சமூக நலத்துறையின் முதன்மை செயலாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். தேசிய முதியோர் மையங்கள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com