

நீலகிரி,
ஒரு காலத்தில் சிட்டுக்குருவிகள், பெரும்பாலும் வீடுகளை தேடி வந்துதான் கூடு கட்டும். அப்போது அதன் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. வீட்டின் பரண்கள், விட்டம், ஓடுகளின் இடைவெளிகள், சுவர்களில் உள்ள துளைகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதை வழக்கமாக கொண்டது. சிட்டுக்குருவிகள் சிறிய உயிரினமாக இருந்தாலும், அவை மனிதர்களுக்கு பல நன்மைகளை புரிகின்றன.
வயல்கள், காய்கறி தோட்டங்களில் உள்ள தீமை விளைவிக்கும் பூச்சிகளை சிட்டுக்குருவிகள் அழிக்கின்றன. அத்துடன் வீட்டில் உள்ள கொசு முட்டைகள், மனித இனத்துக்குத் தீங்கு விளைவிக்கும் உயிரினங்களையும் அழிக்கிறது. மேலும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துகிறது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக அமைகிறது.
இவ்வாறு சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வந்தது. சுற்றுச்சூழல் மாற்றம், மனிதர்களின் வாழ்வியல் மாற்றங்கள், பழக்கவழக்க மாறுதல், நகரமயமாக்கல், கூரை வீடுகள் இல்லாமை உள்பட பல்வேறு சூழ்நிலைகள், சிட்டுக்குருவிகளின் வாழ்விடத்தை கேள்விக்குறியாக்கி விட்டன.
சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய தேவையான சூழல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சிட்டுக்குருவிகள் அழிந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக சுற்றுச்சூழல் சமநிலையும் பாதிக்கப்படுகிறது. எனவே, சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் மார்ச் 20-ந்தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க கோத்தகிரி பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகள் மற்றும் வீடுகளில் சிட்டுக்குருவிகள் வாழ கூடுகளை அமைத்து உள்ளனர். வீடுகளில் மீதமான தானிய வகைகளை குருவிகளுக்கு உணவாக வைத்து வருகின்றனர். மேலும் வியாபாரிகள் தினமும் மாலை நேரத்தில் தங்கள் கடைகளுக்கு முன் சிட்டுக்குருவிகளுக்கு அரிசி, தண்ணீரை வைத்து வருவதால், அவற்றை உண்ண சிட்டுக்குருவிகள் கூட்டமாக வந்து செல்கின்றன.
அங்குள்ள கூடுகளில் சிட்டுக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து வருவதால், சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.