

சேலம்,
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து கடந்த 1-ந்தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. அதே நேரம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வீதம் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சற்று மழை குறைந்தது. இதனால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. இதனால் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.
தற்போது கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 5,760 கனஅடியில் இருந்து 7,151 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.