

சென்னை,
பொங்கல் பண்டிகையையொட்டி வழங்க உள்ள இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கான நெசவுக்கூலியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, மக்களுக்கு புதிய ரக வேட்டி, சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டு அதனை உற்பத்தி செய்து வழங்க அரசு முடிவு செய்து அதற்காக நிதி ஒதுக்கி பணிகளும் நடந்து வருகின்றன. இந்த சூழலில் சேலைகள் பாலிகாட் பாவு நூல், பருத்தி ஊடை நூல், பாலியஸ்டர் ஜரிகை பார்டர் நூல் கொண்டும், வேட்டிகள் பாலிகாட் பாவு நூல், பாலிகாட் ஊடை நூல், பாலியஸ்டர் பார்டர் நூல் கொண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் வேட்டிகள் 2 மீட்டர் நீளத்தில் உற்பத்தி செய்து சலவை செய்யப்பட்ட வேட்டிகளாக பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்டி சேலைகள் உற்பத்தி செய்ய டிசம்பர் வரையிலான காலத்துக்கு உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் புதிய ரகங்களில் வேட்டி-சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இதற்கான நெசவுக் கூலியினை உயர்த்தி வழங்க கோரிக்கைகள் பெறப்பட்டன. இதற்காக குழுவும் அமைக்கப்பட்டது.
தற்போதைய விலைவாசி உயர்வு, புதிய ரக வேட்டி-சேலைகளை உற்பத்தி செய்வதில் ஏற்படும் கூடுதல் செலவினங்கள் மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெடல்தறி, விசைத்தறி வேட்டி-சேலைகளுக்கான நெசவுக்கூலியை உயர்த்தி வழங்க கைத்தறி இயக்குனர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். பரிந்துரைக்கப்பட்ட புதிய கூலியையும் அரசுக்கு பரிந்துரைத்து இருந்தார்.
அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து நெசவுக்கூலியை உயர்த்தி வழங்கலாம் எனவும், இதற்கு கூடுதலாக தேவைப்படும் செலவின தொகையாக ரூ.13.66 கோடியினை 2026-27 வரவு செலவுத் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து செலவில் மேற்கொள்ளவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, பெடல்தறி நெசவுக்கூலியாக சேலை ஒன்றுக்கு 125 ரூபாய் 72 காசும், வேட்டி ஒன்றுக்கு 49 ரூபாய் 99 காசும், விசைத்தறி நெசவுக்கூலியாக சேலை ஒன்றுக்கு 54 ரூபாய் 81 காசும், வேட்டி ஒன்றுக்கு 23 ரூபாய் 34 காசும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.