இந்திய கடலோரக் காவல் படை கப்பல் 'சாரங்' 27 ஆண்டு கால சேவைக்கு பின் ஓய்வு

ஆரம்பத்தில், இந்தக் கப்பல் மும்பையில் நிலைநிறுத்தப்பட்டு, பின்னர் 01 ஏப்ரல் 2002 அன்று சென்னைக்கு மாற்றப்பட்டது.
இந்திய கடலோரக் காவல் படை கப்பல் 'சாரங்'
Published on

சென்னை,

இந்திய கடலோரக்காவல் படை கப்பலான சாரங், தனது நீண்டகால சிறப்பான சேவைக்குப்பின்னர் 2026 மே 31 அன்று பணியிலிருந்து விடைபெற்றது. சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற ஒரு பாரம்பரிய விழாவில், சாரங் கடலோரக் காவல் படையின் முழு மரியாதைகளுடன் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு, கடலோரக் காவல் படையின் கிழக்குக் கடற்கரைப் பிரிவின் தளபதியும் கூடுதல் தலைமை இயக்குநருமான டோனி மைக்கேல் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு குடிமைப்பணி அலுவலர்கள், மூத்த இராணுவ அதிகாரிகள், கப்பலின் முந்தைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சாரங் கப்பல்

இந்தக் கப்பல், இந்திய கடலோரக் காவல் படையின் முதல் தலைமை இயக்குநராக இருந்த துணை அட்மிரல் வி.ஏ. காமத் (ஓய்வு), அவர்களால் 1999 ஜூன் 21 அன்று கோவாவில் சேவையில் சேர்க்கப்பட்டது. ஆரம்பத்தில், இந்தக் கப்பல் மும்பையில் நிலைநிறுத்தப்பட்டு, பின்னர் 01 ஏப்ரல் 2002 அன்று சென்னைக்கு மாற்றப்பட்டது.

அணிவகுப்பு மரியாதை

"சாரங்" என்றால் "பருந்து" என்று பொருள், இது உறுதிப்பாடு, கவனம், எதிர்காலத் திட்டமிடல், உள்ளுணர்வு சார்ந்த முடிவெடுத்தல், பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தப் பெயர், உண்மையின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது. நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாக்கவும் பாடுபடவும் இந்தியக் கடலோரக் காவல்படை கொண்டுள்ள மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக சாரங் விளங்கியது. கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட சாரங், இந்தியாவின் தொழில் வலிமையையும் தற்சார்பையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தது.

சாரங் கப்பலுக்கு விடையளிக்கும் கம்பீரமான விழாவின் போது, அதற்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. சூரியன் அடிவானத்தில் மறையும் வேளையில், கடலோரக் காவல்படையின் கொடியானது கொடிக்கம்பத்திலிருந்து கடைசி முறையாக இறக்கப்பட்டது. அதன்மூலம், சாரங் கடலோர ரோந்துக் கப்பலின் 27 ஆண்டுகால சிறப்பான சேவை முடிவு பெற்று அது ஒய்வு பெற்றது. கப்பலின் சேவைக்காலம் முழுவதும் அதில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள், மற்றும் மாலுமிகள் கப்பலுக்கு அன்பான பிரியாவிடை அளிக்க இத்தருணத்தில் ஒன்றுகூடினர்.

கப்பல் ஆற்றிய முக்கியப் பங்கு

கடலோரக் காவல்படையின் கிழக்குக் கடற்கரை பகுதி தளபதி இந்நிகழ்ச்சியில் பேசுகையில்:- தேசத்திற்கு இக்கப்பல் ஆற்றிய முன்மாதிரியான பங்களிப்புகளையும் உறுதியான சேவையையும் எடுத்துரைத்தார். இலங்கைக் கடற்பரப்பில் 'நியூ டைமண்ட்' என்ற மோட்டார் டேங்கர் கப்பலில் ஏற்பட்ட தீயணைப்புப் பணியின்போது இக்கப்பல் ஆற்றிய முக்கியப் பங்கு உட்பட, அதன் அசாதாரணமான செயல்பாடுகளையும், கடற்பரப்பில் அதன் விழிப்பான பணிகளையும் அவர் நினைவுகூர்ந்தார். இவ்வாறு பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com