

நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திலீபன் 555 நாட்கள் பணிக்கு வராததால் பணியில் இருந்து விடுவித்து நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திலீபன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சுழற்சி முறையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
அப்போது, தன்னுடன் பணியாற்றிய பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போதைய டிஐஜி திருநாவுக்கரசுவிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு திலீபனை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-ல் அருமனை காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில், உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் சுமார் 555 நாட்களுக்கு மேலாக அவர் விடுமுறை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின்போதும் அவர் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, சிஐஜி அலுவலகத்தின் மூலம் அவரைப் பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தற்போது திலீபன் காவல்துறையில் இருந்து நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.