2024 -25இல் வட்டி ரூ.62,456 கோடி: 4 ஆண்டாக கடன், வட்டியில் தமிழகம் முதலிடம் - அன்புமணி

தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ. 9,55,690 கோடியாக உயர்ந்திருக்கிறது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலிலும், அதிக வட்டி செலுத்தும் மாநிலங்கள் பட்டியலிலும் தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. மாநிலத்தின் நிதி மேலாண்மையை திமுக அரசு எந்த அளவுக்கு சிதைத்து வைத்திருக்கிறது என்பதற்கு இது தான் வேதனையான எடுத்துக்காட்டு ஆகும்.
2024-25ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ. 9,55,690 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படுவதும், மக்கள்தொகை மற்றும் நிலப்பரப்பில் பெரிய மாநிலமுமான உத்தரப்பிரதேசம் கூட அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் ரூ. 8.57 லட்சம் கோடி கடனுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாகக் கருதப்படும் மராட்டியம் ரூ.8.12 லட்சம் கோடி கடனுடன் மூன்றாவது இடத்திலும் தான் உள்ளன. அதிலும், தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் இடையிலான கடன் வித்தியாசம் சுமார் ரூ.1 லட்சம் கோடி என்பதிலிருந்தே தமிழ்நாடு அரசு எவ்வளவு மோசமான கடன் வலையில் சிக்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்திருப்பதற்கு காரணம் திமுகவின் மிக மோசமான நிதி நிர்வாகம் தான். 2020-21ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேசம் தான் ரூ. 6 லட்சத்து 110 கோடி கடனுடன் முதலிடத்தில் இருந்தது. தமிழ்நாடு ரூ.5 லட்சத்து 68,893 கோடி கடனுடன் இரண்டாவது இடத்தில் தான் இருந்தது. 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கு முன்பு இல்லாத வகையில் அதிக அளவில் கடன்களை வாங்கிக் குவித்தது தான் தமிழ்நாட்டின் கடன் சுமை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு காரணம் ஆகும்.
அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் அதிக வட்டி செலுத்தும் மாநிலங்கள் பட்டியலிலும் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ரூ.62,456 கோடியை வட்டியாக செலுத்தியுள்ளது. தமிழ்நாட்டை விட அதிக உற்பத்தி மதிப்பு கொண்ட மராட்டியம் ஆண்டுக்கு ரூ.56,727 கோடி மட்டுமே வட்டியாக செலுத்துகிறது. உத்தரப்பிரதேசம் தவிர பிற மாநிலங்கள் ரூ.50,000 கோடிக்கும் குறைவாகவே வட்டி செலுத்துகின்றன.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 2020-21ஆம் ஆண்டில் அதிக வட்டி செலுத்தும் மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் தான் ரூ.36,970 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது. தமிழ்நாடு ரூ.36,497 கோடி வட்டியுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி வட்டி அதிகரிக்கும் அளவுக்கு புதிய கடன்களை திமுக அரசு வாங்கிக் குவித்திருக்கிறது. நடப்பாண்டில் தமிழக அரசு செலுத்த வேண்டிய வட்டி ரூ.70 ஆயிரம் கோடியைத் தாண்டி விடும் என்பது இன்னொரு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.
எந்த ஒரு மாநில அரசும் கடன் வாங்காமல் நிர்வாகம் செய்ய முடியாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக் கொள்கிறது. ஆனால், அரசின் செலவுகளையும், மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவுகளையும் வருவாய் வரவுகளைக் கொண்டே சமாளித்து விட்டு, மூலதன செலவுகளுக்காக மட்டுமே கடன் வாங்குவது தான் நல்ல நிதி நிர்வாகத்திற்கான அடையாளம் ஆகும். ஆனால், மூலதனச் செலவை விட மூன்று மடங்குக்கும் கூடுதலாக கடன் வாங்கி தமிழகத்தை மீள முடியாத கடன் சுமையில் திமுக அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது.
இதற்குக் காரணம் வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு கட்டுப்படுத்தாதது தான். வருவாய் பற்றாக்குறையை ஒழித்து வருவாய் உபரியை ஏற்படுத்துவோம் என்று ஒவ்வொரு ஆண்டும் சூளுரைத்து வரும் திமுக அரசு, ஐந்தாண்டுகளாகியும் வருவாய்ப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தவில்லை. அதனால் தான் தமிழக அரசின் கடனும், அதற்கான வட்டியும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
2024-25ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்தக்கடன் ரூ.9.55 லட்சம் கோடி. தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடி என வைத்துக் கொண்டால் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன் உள்ளது. 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.6 லட்சம் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டக் கடனை கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு தான் வாங்கிக் குவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 55 மாதங்களாக வேதனைகளை மட்டுமே மக்களுக்கு பரிசாக அளித்து வரும் திமுக அரசு, சாதனைகளை படைத்து விட்டதாகக் கூறி மக்களின் வரிப்பணத்தில் கொண்டாட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. திமுகவின் இலக்கணப்படிப் பார்த்தால் அதிக கடன்களை வாங்கிக் குவிப்பதிலும், அதற்காக அதிக வட்டியை செலுத்துவதிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியிருப்பது கூட ஒரு வகையில் சாதனை தான். இப்படி ஒரு சாதனை படைத்ததற்காக திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ஒரு மாநிலத்தின் நிதி நிர்வாகம் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் திமுகவின் ஆட்சி ஆகும். தமிழ்நாட்டு மக்களுக்கு விடியலைத் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, பெரும் இருளைத் தான் கொடுத்திருக்கிறது. இந்த இருளுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவு கட்டுவர். திமுக ஆட்சி அகற்றப்ப்பட்ட பிறகு தமிழக மக்களின் வாழ்வில் உண்மையான வெளிச்சம் பரவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






