

சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. அதில் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் பங்கேற்கவில்லை.
அதாவது இருவரும் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள அதிருப்தி காரணமாக பங்கேற்கவில்லை என்று அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் இருவருக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள் வருகிற 3-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.
அதேபோல், ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், சேலம் மாவட்டம் சங்ககிரி - ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை நினைவுச்சின்னத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று வேலுமணி, தங்கமணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா? அல்லது புறக்கணிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.