உலக மகளிர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துப்பதிவு


உலக மகளிர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துப்பதிவு
x

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படப்படுவதை ஒட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சர்வதேச மகளிர் தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதன்படி சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் 'பிங்க் ஆட்டோ' திட்டத்தை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் 'உலக மகளிர் தின விழா' நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை முதல் புதுமைப்பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அந்த வீடியோவில் பேசி உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "வணக்கம். நலமா? மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் சகோதரிகள் ரூ.1000 உரிமைத் தொகை பெறுகிறார்கள். தாய்வீட்டு சீர் மாதிரி எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திர சீர் என்று எந்நேரமும் தமிழ் சகோதரிகள் மனம்மகிழ சொல்றாங்க. அது தான் விடியலின் ஆட்சி.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்துக்கு தான். இந்த விடியல் பயணமானது. மகளிரின் சேமிப்பை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர்கல்வியைப் பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று வாய் நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பாச உணர்வுதான் முக்கியம். அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் உலக மகளிர்தின வாழ்த்துகள்" என்று அதில் அவர் கூறியுள்ளார்.



1 More update

Next Story