

தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் எழிலரசி (23 வயது). இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பெண் குழந்தை பாலக்கோட்டில் எழிலரசியின் தாயார் ரமணி (45 வயது) பராமரிப்பில் வளர்ந்து வந்தது.
இந்த நிலையில் தர்மபுரியில் வசிக்கும் அய்யப்பன் (27 வயது) என்ற தனியார் நிதி நிறுவன ஊழியருடன் எழிலரசிக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யப்பனை அவர் 2-வது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு 2 பேரும் தர்மபுரி கொல்லஅள்ளி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். ரமணியிடம் இருந்த தனது பெண் குழந்தையை அவருக்கு தெரியாமல் எழிலரசி அழைத்து வந்துவிட்டார்.
இந்த நிலையில் உல்லாசத்திற்கு இடையூறாக இருப்பதாக அய்யப்பன் குழந்தையின் உடலில் பல இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதில் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் எழிலரசி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இது பற்றி தகவல் அறிந்த எழி லரசியின் தாயார் ரமணி மருத்துவமனைக்கு வந்து குழந்தையை பார்த்தார்.
அப்போது உடல் முழுவதும் தீக்காயங்களுடன் குழந்தை சிகிச்சை பெறுவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக ரமணி தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய அய்யப்பன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த எழிலரசி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.