முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து

மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து
Published on

சென்னை,

லண்டனில் முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ரூ.15,300 கோடி முதலீடு

ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதல-அமைச்சர் விஜய் முன்னிலையில் (14.9.2026) நேற்று இங்கிலாந்து, லண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனத்திற்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து அக்குழுமத்தினர் தமிழ்நாடு முதல்-அமைச்சரை சந்தித்து விளக்கிக் கூறினர்.

45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான 'சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்' (Samvardhana Motherson International Limited), தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L.) சார்ந்த வசதிகளை நிறுவுவதன்மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

ரூ.11,000 கோடி முதலீடு

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகள், மதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையர்களுடன் (Joint Venture & Technical Partners) இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளன.

ரூ.300 கோடி முதலீடு

பிரிட்டனைத் (UK) தலைமையிடமாகக் கொண்ட, திறன்மிக்க மின்மாற்றிகளைத் தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் உற்பத்திக்கான ஒரு முன்னணி மையமாகத் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres), தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் (Guidance TamilNadu) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் (Ernst & Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 'கட்டு-இயக்கு-மாற்றியமை-மாற்று' (Build-Operate-Transform-Transfer - BOTT) ஏற்பாட்டின் கீழ், இந்த மையத்தை நிறுவுவதற்கும், அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர், அம்மையம் அச்சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.

ரூ.3,000 கோடி முதலீடு செய்திட விருப்பக் கடிதம்

ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில், தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் தனது விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்தது. முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், மாநிலத்தில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது.

ஹிந்துஜா குழுமத்தின் தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பு

அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Finolex Industries Limited) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா, ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் லண்டனில் தமிழ்நாடு முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது, ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற 'வெற்றி' (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உட்பட, தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழுமம் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து ஹிந்துஜா அவர்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அரசின் முழு ஆதரவு

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தமிழ்நாட்டுடன் வர்த்தக மற்றும் வணிகத் தொடர்புகளை ஆழப்படுத்தவும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய முன்னணி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் அழைப்பு விடுத்ததோடு, முதலீடுகளை எளிதாக்குவதிலும், மாநிலத்தில் அவர்களின் வணிகங்களை வெற்றிகரமாக நிறுவி இயக்குவதற்குத் தேவையான தமிழ்நாடு அரசின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் சந்திப்புகளுடன், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, இரசாயனங்கள், தளவாடங்கள், கட்டுமானம், நிதிச் சேவைகள், சில்லறை வர்த்தகம் மற்றும் சட்ட சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 10 முன்னணி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தினர். இந்தக் கலந்துரையாடல்களின் சாத்தியமான விளைவுகளில், பிரிட்டன் வர்த்தக நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் இடையேயான மூலப்பொருட்கள் கொள்முதல் ஒப்பந்தங்கள்; ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் குழு வருகை புரிவதற்கான வாய்ப்பு; அக்டோபர் மாதம் சென்னைக்கு இங்கிலாந்து மேயர் ஆணையத்தின் (NEMSA) பிரதிநிதிகள் குழுவின் வருகை; நிதிச் சேவைத் துறைக்கான திறன் மேம்பாட்டுக் கூட்டாண்மைகள்; இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிப் பயிலரங்கம்; பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காட்டும் அறிக்கை தயாரித்தல் ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்வுகளில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, I.F.S., நிதி மணி திரிபாதி, இ.ஆ.ப., Minister (Economic), High Commission of India, London, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com