

சென்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அக்கட்சிக்கு தேவையாக இருந்தது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில், தி.மு.க. கூட்டணியில் அப்போது இடம் பெற்றிருந்த காங்கிரஸ், த.வெ.க.வுக்கு முதன்முதலில் தன்னுடைய ஆதரவை வழங்கியது. அக்கட்சி நிர்வாகிகள் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அவரிடம் வழங்கினர்.
இதன்பின்னர் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறும்போது, த.வெ.க. ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும், அதன் அமைச்சரவையில் காங்கிரஸ் நிபந்தனையுடன் பங்கேற்கும் என்று கூறினார். காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்று கொண்டார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்.எல்.ஏ.க்களுடன் சோடங்கர் இன்று டெல்லிக்கு சென்றார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சோடங்கர், கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார். கட்சியை பலப்படுத்த இதுவே சரியான நேரம். கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுங்கள் என்றும் கூறினார் என்றார்.
த.வெ.க.வின் அமைச்சரவையில் இடம் பெற அழைப்பு வந்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் இடம் பெற உள்ளனர் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுபற்றி த.வெ.க. தலைவர் விஜய் முடிவெடுப்பார் என கிரிஷ் சோடங்கர் கூறினார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என விஜய் கூறியிருந்த நிலையில், அதனை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், 59 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் இடம் பெற உள்ளது.