தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் "இரும்பின் தொன்மை" புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினை தொடங்கி வைத்தல் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கீழடி இணையதளத்தினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து, "இரும்பின் தொன்மை" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது. 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம். இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம்.

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன. பொருநை ஆற்றங்கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவுவெளிப்படுத்தியது.

இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின்வாயிலாக நான் உலகிற்கு அறிவித்திருக்கிறேன். தமிழ் - தமிழ் நிலம் - தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல, அரசியலுக்காகச் சொன்னவை அல்ல, வரலாற்று ஆதாரங்கள். உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com