நீட் தேர்வில் தொடர்ந்து குளறுபடிகள்; தேசிய தேர்வு முகமை அமைப்பை சீரமைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

வினாத்தாள் கசிவுகளால் மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தொடர்ந்து குளறுபடிகள்; தேசிய தேர்வு முகமை அமைப்பை சீரமைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
Published on

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதனிடையே நீட் தேர்வு வினாத்தாள் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அமைப்பை மாற்ற வேண்டும் அல்லது, மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ‘அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு’ (FAIMA) சார்பில், வழக்கறிஞர் தன்வி துபே தாக்கல் செய்துள்ளார். வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்ட தொடர் குளறுபடிகள் காரணமாக 22.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படுவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேசிய தேர்வு முகமை அமைப்புக்கு பதிலாக ஒரு புதிய அமைப்பு முறையாக அமைக்கப்படும் வரை, உயர் அதிகாரம் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும், இனிமேல் வினாத்தாள் கசியாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, ஒரு சைபர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் ஒரு தடயவியல் விஞ்ஞானி ஆகியோர் இடம்பெற வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com